காஞ்சிபுரம்: மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலை மற்றும் தெரு பகுதிகளில் பசுமாடுகள், எருமை மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாங்காடு பகுதியில் உள்ள, அடிசன் நகர் ஸ்ரீ ராகவேந்திரா தெருவில் இரட்சணா தேவி என்ற பெண் இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் முன் நிறுத்துவதற்காக நின்றுக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடுகள் திடீரென மிரண்டு, அந்த பெண்ணை நோக்கி வேகமாக ஓடி வந்தன, இதனைக் கண்டு சுதாரித்த அவர் பதறியடித்து அங்கிருந்து ஓடினார். பின்னர் மாடுகள் அவர் ஒட்டி வந்த ஸ்கூட்டியை வேகமாக இடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றது.
இந்தநிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த பெண் உயிர் பயத்துடன் பதறிப் போய் நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், மாடுகள் மிரண்டதில் நூலிழையில் உயிர் தப்பியது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக மாடுகள் முட்டியதில் தேவியினுடைய இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுத் திரியும் மாடுகளால் முதியவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் சாலையில் நடமாடுவதற்கு கூட பெரிதும் அச்சப்படுகின்றன.
மேலும், மாடுகள் சாலைகளின் நடுவே ஆங்காங்கே படுத்து உறங்குவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் மாங்காடு நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றமசாட்டியுள்ளனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துச் சென்று இதற்கு நிரந்த தீர்வு காணவேண்டும். மேலும் சாலையில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்யாண ராணி சத்யாவுக்கு உடந்தையாக இருந்த தமிழ்செல்வியின் முன் ஜாமீன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!