ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கேத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ், இவர் எல்.ஐ.சி-யில் முகவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், ஸ்ரீதர் மற்றும் சுகந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (பிப்.19) இரவு வீட்டினில் கதவைப் பூட்டிவிட்டு, நடராஜ் வீட்டில் உள்ள ஒரு அறையிலும் அவரது மனைவி காஞ்சனா வெளி அறையிலும் இரண்டு மகன்களும் வெவ்வேறு அறைகளிலும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையன் நடராஜ் வீட்டின் உள்ளே சென்றுள்ளான்.
இதன் பின்னர் வீட்டின் கதவைத் திறக்க முயற்சித்த போது வீட்டின் உள்பகுதியில் பூட்டியிருந்ததை அறிந்த கொள்ளையன் வீட்டின் வெளியே நீண்ட நேரமாகக் காத்திருந்ததாகத் தெரிகிறது, அதனைத் தொடர்ந்து நடராஜ் அதிகாலையில் கதவைத் திறந்து வெளியே சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் திடீரென வெளியில் பதுங்கி இருந்த கொள்ளையன் வீட்டின் உள்ளே சென்றபோது, அறையில் தூங்கிக் கொண்டிருந்த காஞ்சனா கொள்ளையனைப் பார்த்துச் சத்தமிட்டுள்ளார். இதனால், காஞ்சனா முகத்தைத் துணியால் அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்யும் முயற்சியில் கொள்ளையன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் எழுந்து வந்து பார்த்தபோது தனது தாயை மர்மநபர் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யும் முயல்வதைக் கண்டு சத்தமிட்டுள்ளார். இந்த சூழலில் வெளியே சென்ற நடராஜ் வீட்டின் உள்ளே ஓடி வந்துள்ளார்.
இவர்களைக் கண்டதும் கொள்ளையன் வீட்டை விட்டு வெளியே தப்பித்துச் சென்றுள்ளான். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து, காலை நடராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்தூர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற கடத்தூர் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவளைத்து சோதனை செய்து தடயங்களைச் சேகரித்தும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நடராஜ் வீட்டிலிருந்து சுமார் 200 அடி தூரம் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கொள்ளையன் அணிந்திருந்த முகமூடி, கத்தி உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகை திரிஷா குறித்து அவதூறு - நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்! ஆடியோ வெளியிட்டு எதிர்ப்பு!