திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 4ம் தேதி ஜெயக்குமார் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூர் தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
எனவே, சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெயக்குமார் மனைவி, மகன்கள் உட்பட குடும்பத்தினரிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது. சிபிசிஐடி எஸ்பி முத்தரசி சில வாரங்களுக்கு முன்பு நெல்லை வருகை தந்து கரைசுத்துபுதூர் தோட்டத்தில் ஆய்வு நடத்தி வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
அதேசமயம் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகும் ஜெயக்குமார் மரணத்தின் பின்னணி பெரும் ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு, எஸ்பி முத்தரசி ஆகிய மூன்று பேரும் நேற்று ஒரே நாளில் நெல்லைக்கு வந்தனர்.
அவர்கள் கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் தோட்டத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஐஜி உட்பட சிபிசிஐடி உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு ஜெயக்குமார் வழக்கின் விசாரணை அதிகாரி உலகராணி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜெயக்குமார் எழுதியதாக வெளியான மரண வாக்குமூலம் கடிதத்தில் முதல் நபராக இடம்பெற்றுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த ராஜாவை சிபிசிஐடி போலீசார் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்பு வள்ளியூரில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது ஜெயக்குமாருடன் இருந்த தொடர்பு குறித்து ஆனந்த ராஜா தனது விளக்கத்தை கடிதமாக அளித்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் இன்று ஆனந்த ராஜாவிடம் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் வழக்கில் உயரதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டுள்ள நிலையில் மரண வாக்குமூலம் கடிதத்தில் இடம்பெற்ற நபரிடம் நடைபெற்று வரும் தொடர் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடிதத்தில் இடம்பெற்றுள்ள கேவி. தங்கபாலு உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அடுத்தடுத்த விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜெயக்குமார் வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தை வாளியில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை!