சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் சமயத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இதனை கொண்டு வந்ததாக நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, தாம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பணம் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், அவரது ஹோட்டலில் இருந்து தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த பணம் சென்னையில் பல்வேறு இடங்களில் கைமாறிக் கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
பின்னர் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் ஆவணங்களை பெற்ற பின்பு, இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை வீடியோ பதிவாக செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சில இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நவீன், சதீஷ், பெருமாள் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி நேரில் அழைத்து, இந்த பணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சொந்தமான ஓட்டலில் வைத்து பணம் கைமாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கும் சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பாஜக நிர்வாகிகளுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், பாஜக அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் மற்றும் பாஜக மாநில பொறுப்பாளரான எஸ்ஆர் சேகர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் வெளிமாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி போலீசாரிடம் காலஅவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஆஜராகும் பட்சத்தில் அவர்களிடம் நடத்தப்படும் விசாரனையின் அடிப்படையில் அடுத்த கட்டண நகர்வை சிபிசிஐ போலீசார் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்கு: ஒருநாள் போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி - Felix Gerald