சென்னை: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சிவக்குமார் என்பவர் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியான ராஜலட்சுமியின் வீட்டில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில், அவர் டிஐஜி வீட்டில் இருந்து ரூ.4.25 லட்சம் பணத்தை திருடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிவக்குமாரை தனிச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, சிபிசிஐடி போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியான ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆயுள் தண்டனை சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி தாக்கிய விவகாரத்தில், டிஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி எஸ்.பி.வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடைபெற்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சிறை கைதியை வீட்டு வேலை செய்யச் சொல்லிய டிஐஜி? - விசாரணையை கையிலெடுத்த சிபிசிஐடி போலீசார்!
இந்த விசாரணை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை சிறைக் கைதி சிவக்குமார் எவ்வளவு மாதங்களாக வீட்டில் வேலை செய்தார்? வீட்டுப் பொருட்களை திருடியதற்கான ஆதாரங்கள் என்ன? சிறைக் கைதியை தாக்கியது யார்? என்பது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதவு செய்ததாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்