கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 21 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில், மெத்தனால் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட மாதேஷ் சென்னை, மாதவரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களிடமிருந்து சட்ட விரோதமாக மெத்தனால் வாங்கி இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் மாதேஷ் உட்பட சிலரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூன்று நாள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக காவலில் எடுத்த நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் மெத்தனல் எந்தெந்த தொழிற்சாலையில் இருந்து வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சென்னை, மாதவரம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனால் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, தொழிற்சாலையில் இருந்து இவர்களுக்கு மெத்தனால் வழங்கியவர்களின் பட்டியலை தயாரித்து, அந்தந்த தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் அதில் பணிபுரியும் நபர்கள் யாராவது போலி ரசீது மூலம் மெத்தனாலை விற்பனை செய்தார்களா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்துவதற்கு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலை உரிமையாளர்களை தனித்தனியாக வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் மூலமே இந்த மெத்தனால் விவகாரத்தில் முழு விவரம் தெரியவரும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆறு ஆண்டுகளில் அதிக கொலைகள்.. தூத்துக்குடி முதலிடம்.. மதுரைக்கு பிறகு இந்த மாவட்டமா?