மயிலாடுதுறை: ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் நகரின் நடுவே உள்ள காவிரி துலா கட்டம், இந்துக்கள் மத்தியில் காசிக்கு நிகராக கருதப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற இந்த மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி சிவபெருமானை வணங்கி, தங்களது பாவச் சுமைகளை நீங்கி விமோசனம் பெற்றதாக ஐதீகம் உள்ளது.
மேலும், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவ ஆலயங்களில் இருந்தும் ஐப்பசி மாதம் முழுவதும் சுவாமிகள் வீதி உலாவாகச் சென்று காவிரி துலா கட்டத்தில் அருள் பாலிப்பர். அதிலும் குறிப்பாக, ஐப்பசி 30ஆம் தேதி கடை முக தீர்த்தவாரி நடைபெறும். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் உடைய இந்த காவிரி துலா கட்டத்தில், ஆற்றின் நடுவே 16 தீர்த்தக் கிணறுகள் உள்ளதாகவும், இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: நவராத்திரி விழா: பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி!
இதற்காக மயிலாடுதுறை மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து தர்ப்பணம் கொடுத்து செல்வது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் குறைந்த அளவில் இருப்பதால் உலகப் புகழ் பெற்ற மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய குறைந்த அளவே பொதுமக்கள் வந்தனர்.
மேலும், வீடுகளிலேயே குளித்துவிட்டு காவிரி கரைக்கு வந்த பொதுமக்கள், பூஜைகள் செய்த பிண்டங்களை காவிரியில் கரைத்து விட்டுச் செல்கின்றனர். இது போன்ற முக்கிய நாட்களில் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்