தஞ்சாவூர்: காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் மேகதாது அணை கட்டுமான திட்டத்திற்கு எதிராக இன்று (பிப்.16) தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது, காவிரியில் மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் சட்டவிரோத திட்டத்திற்கு தடை கோரி தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் என்பது கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி நீரை பகிர்ந்து அளிப்பதற்காக மட்டுமே அதிகாரம் கொண்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மேகதாது அணையை அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் காவிரி ஆணையத் தலைவர் ஹல்தர் கொடும்பாவி எரிப்பு போராட்டம் இன்று நடைபெறும் எனவும், நமது காவிரியைக் காக்கும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், ஒரு வாரத்திற்கு முன்பு தஞ்சையில் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழு கலந்தாய்வுக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தஞ்சை பனகல் கட்டடம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மத்திய, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் மணிமொழியன், ரமேஷ், ராசேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் காவிரி ஆணைய தலைவர் ஹல்தர் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர், சாலையில் கொளுந்து விட்டு எரிந்த ஹல்தர் கொடும்பாவியின் உருவ பொம்மையை தீயணைப்பு கருவி மூலம் அணைத்தனர். இதனால் போலீசாருக்கும், ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மணியரசன், "மேகதாது அணை கட்டுவதற்கு காவிரி ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இது சட்டவிரோதமாக காவிரி ஆணைய கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக அரசுக்கு தமிழ்நாடு அரசும் துணை போகிறது. மத்திய நிர்வள ஆணையம் அல்லது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று கூற வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசும் போராட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, கர்நாடகாவில் கடந்த பிப்.12ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நிலையில், அதில் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதலமைச்சர் சித்தராமையா இன்று (பிப்.16) தாக்கல் செய்தார். அதில், மேகதாது அணையைக் கட்ட பிரத்யேக அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் தேவையான அனுமதிகளைப் பெற்று மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.