சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைப் பேராசிரியர்கள் 13 பேரை பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் இணை ஆசிரியராக பணியாற்றி வரும் 13 மருத்துவர்கள், புதிய இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் இடமாறுதல் குறித்த விருப்பங்களையும், முன்னுரிமைகளையும் குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், விருப்பங்களையும், முன்னுரிமைகளையும் கருத்தில் கொள்ளாமல் இடமாற்றம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த உத்தரவுகளை எதிர்த்து 13 இணைப் பேராசிரியர்களும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் ஜி.சங்கரன் ஆகியோர், கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பணியிட மாறுதல் கொள்கை நடைமுறைகளை பின்பற்றாமல், இடமாற்றம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.
ஆனால், பணியிட மாறுதல் கொள்கை நடைமுறைகளைப் பின்பற்றி, சட்டப்படி நியாயமான முறையில் பணியிட மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரசேன் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், பணியிட மாறுதல் குறைதீர் குழு, முன்னுரிமை குறித்து பரிசீலிக்காமல், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பணியிட மாற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகக் கூறி, 13 இணைப் பேராசிரியர்களின் இடமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், பணியிட மாறுதல் கொள்கையைப் பின்பற்றி ஒரு மாதத்தில் பணியிட மாற்றப் பணிகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் எனவும், இடமாறுதல் செய்யப்பட்ட பகுதிகளில் பணிக்கு சேராததை காரணம் காட்டி மனுதாரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு விண்ணபிக்க கால நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - TN School Teachers Transfer