சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் தனித்தீர்மானம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் பேசியதாவது, “தமிழ்நாடு அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிமை இருக்கும் பட்சத்தில், இதனை மறுப்பது வருத்தமளிக்கிறது.
சாதி வாரியான கணக்கெடுப்பை ஊராட்சிகளுமே நடத்துவதற்கான அனுமதிகூட உள்ளது. ஆகையால், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை இல்லை என்ற கண்ணோட்டத்தை அகற்ற வேண்டும். முதல்வரின் தீர்மானம் தேவையில்லாதது. மாநில அரசின் உரிமையை ஏன் நாம் விட்டுக் கொடுக்க வேண்டும்? மாநில அரசே சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சுயாட்சி பேசும் தமிழ்நாடு அரசு, நமக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்றார்
பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் வாதத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில்: சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் தான் புள்ளி விவரங்களை தர முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசு சென்சஸ் எடுக்கும்போது சேர்ந்து எடுக்க வேண்டும். 2021ஆம் ஆண்டு சென்சஸ் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, அதை உடனடியாக எடுத்து, அதோடு சாதிவாரிக் கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
நாம் எடுக்கும் போது, அதை ஓவர்-ரைட் செய்யக்கூடிய அதிகாரம் சென்சஸ் Act-க்கு உள்ளது. எனவே, அப்படியான பிரச்னை நீதிமன்றத்திற்குச் சென்று வரக்கூடாது என்ற நோக்கத்தோடு மத்திய அரசை வலியுறுத்தி சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு சென்சஸ் அடிப்படையில் எடுத்தால் தான் செல்லும்” என்றார்.
முன்னதாக, அவையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேச அனுமதி தரவில்லை எனவும் இட ஒதுக்கீடு என்று பேசினாலே மைக்கை ஆப் செய்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.