மதுரை: மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆகவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் போதும், தனியார் பேருந்துகளுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பும், மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிங்கர், "இது போன்ற வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்து உள்ளது. அதனை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அமர்வு, மனுதாரரின் மனுவைப் போக்குவரத்துக்கு துறை செயலாளர் பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்!