நாமக்கல்: கேரள மாநிலத்தில் ATM-இல் பணம் கொள்ளையடித்து விட்டு, தமிழ்நாடு வழியாக தப்பிச் செல்ல முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நாமக்கல் போலீசார் நேற்று சுட்டுப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
மேலும், ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிடிபட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன், வெப்படை காவல் நிலையத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை அடுத்து ஆந்திரா, கேரளா மாநில போலீசாரும் இவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்திலும், இதுபோன்ற சொகுசு காரில் சென்று ATM-இல் பணம் கொள்ளை அடிக்கும் சம்பவம் நடந்துள்ளதால், அம்மாநில போலீசாரும் இது குறித்த தகவல் கேட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி சம்பவத்திலும் இந்த குழுவினர் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் அம்மாவட்ட போலீசார் இங்கு வந்து தகவல் திரட்டி சென்றுள்ளனர். இவர்களைப் போல ஹரியானா மாநிலத்தில் இருந்து வேறு குழுவினர் யாரும் குற்றச் செயலில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சூர் ATM கொள்ளைச் சம்பவத்தைப் பொறுத்தவரை, இந்த 7 பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு வேறு எதுவும் குழு கிடையாது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் மீதும் பல மாநிலங்களில் வெவ்வேறு வழக்குகள் உள்ளன.
இதையும் படிங்க : கேரளாவில் கொள்ளை.. தமிழ்நாட்டில் என்கவுண்டர்.. ஏடிஎம் கொள்ளை கும்பலின் திக் திக் சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு வழக்கில் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர். வழக்கு உள்ளவர்களும் இதுவரை வழக்கை சந்திக்காதவர்களும் இந்தக் குழுவில் உள்ளனர். எந்த இடத்தில் கொள்ளையில் ஈடுபட்டனர் என்ற விவரம் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து ATM மையங்களிலும் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை சரியான முறையில் இயங்குகிறதா என்பதை தொடர்ந்து உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், முக்கிய இடங்களில் ATM காவலாளிகளைப் பணியில் அமர்த்தவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
அதிக பயன்பாட்டில் அல்லது குறைபாடு உள்ள ATM-களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கச் சொல்லி இருக்கிறோம். பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க, வங்கி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த உள்ளோம்.
இதையும் படிங்க : எஸ்பிஐ ஏடிஎம் மட்டும் டார்கெட் ஏன்? - வடமாநில கொள்ளையர்களிடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
இதுவரை விசாரணை ஓரளவு முடிவடைந்துள்ளது. ரிமாண்டுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட கால நேரத்திற்குள், அவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 நபர்கள் விமானத்திலும், 3 பேர் காரிலும், 2 பேர் கண்டெய்னர் லாரியிலும் வந்து சென்னையில் ஒன்றாக சேர்ந்து பின்னர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.67 லட்சம் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளோம். அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் பல வகையான குற்ற வழக்குகள் உள்ளன. ஹரியானா - ராஜஸ்தான் எல்லையில் உள்ள எவாட் பகுதியில் சில மாவட்டங்களில் இருந்து இவர்கள் வந்துள்ளனர்.
என்கவுண்டரில் உயிரிழந்த நபரின் உடல், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முயற்சி, பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்