வேலூர்: வேலூர் மாவட்டம், அனைக்கட்டு பகுதியில் உள்ள தோளப்பள்ளி ஊராட்சி தலைவராக செயல்பட்டவர் கல்பனா. இவர் போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக, அக்கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, கல்பனா சமர்பித்த சான்று போலியானது என நீதிமன்றம் அறிவித்து, அவரை பதவி நீக்கம் செய்ய அறிவுறுத்தியது. இதனையடுத்து, அவர் 6.8.2024 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், கல்பனாவின் கணவர் சுரேஷ் தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தில் தலைவரைப் போல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஆதரவாக செயல்படுவதாகவும் பாக்யராஜ் ஊரக வளர்ச்சித்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்த புகார் மனுவில், “தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவி கல்பனா தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும், தொடர்ந்து ஊராட்சி மன்றத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தலைவர் போல் செயல்பட்டு வருகிறார். நேற்று காலை 10.00 மணியளவில் ஊராட்சி மன்ற அனைத்து வார்டு உறுப்பினர்களை அழைத்து, ஊராட்சி செயலாளர் முன்னிலையில் கல்பனா கணவர் சுரேஷ் என்பவர் தலைவர் போல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: மதுரையில் களைகட்டிய தீபாவளி.. புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகம்!
அலுவலகத்தில் கடந்த 24ஆம் தேதி பட்டாசு, இனிப்பு வழங்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் உமாராணி பல பொய் கணக்குகள் எழுதி MGNRS 100 நாள் திட்டத்தில் சுமார் 50 முதல் 60 லட்சத்திற்கு மேல் கூட்டு சதியாக செய்து கொண்டு கொள்ளை அடிக்கும் பணத்தை கல்பனா கணவர் சுரேஷுக்கும் பங்கு போட்டுக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
ஆனால், அதை மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை கண்டு கொள்ளாமல் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடிருந்தார். இந்நிலையில், இந்த புகார் குறித்து ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் கேட்ட போது, “பதவி நீக்கம் செய்யப்பட்ட கல்பனாவின் கணவர் சுரேஷ் அலுவலகத்திற்கு வருகை தந்தும் நடவடிக்கை எடுக்காத அலுவலக அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படும். அவர்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அதேபோல், இந்த MGNRS 100 நாள் திட்டத்தில் மோசடி செய்து, பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்பட்டதாக எழுப்பப்படும் புகாரை பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி பரிந்துரை செய்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்