திருப்பத்தூர்: தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” யாத்திரை மூலம் பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வருகிறார். அதன்படி, கடந்த 2ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.
அப்பொழுது, சான்றோர் குப்பம், ஆம்பூர் புறவழிச்சாலை, ஆம்பூர் பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் பாஜகவினர் அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அண்ணாமலை ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து, நடைபயணமாக ஆம்பூர் நேதாஜி வழியாக சென்று ஆம்பூர் நகர காவல் நிலையம் அருகே பொதுமக்களிடம் கூட்டத்தில் பேசினார்.
இந்நிலையில், ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஆம்பூரில், அனுமதியின்றி கூடுதல் மற்றும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறாக நடைபயணம் மற்றும் வழிமறித்து கூட்டம் கூட்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஆம்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன், ஆம்பூர் நகர தலைவர் சீனிவாசன், துணை தலைவர் அன்பு, மாநில செயலாளர் வெங்கடேசன், மாநில துணை தலைவர் நரேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, தொகுதி மேற்பார்வையாளர் பால கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபிரகாசம், மாநில கூட்டுறவு பிரிவு தலைவர், பிரேம்குமார், திருப்பத்தூர் மாவட்ட பொதுச்செயலாளர் தண்டாயுதபாணி, மற்றும் சரவணன் ஆகிய 12 பேர் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பூனம் பாண்டே செய்த பொய்ச் செய்தி மோசடி: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எச்சரிக்கை மணியா?