சென்னை: கடந்த நவ.3ஆம் தேதி எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் பிரமாணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
சர்ச்சையான கருத்து: இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி உட்பட பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து நடிகை கஸ்தூரி சமூகவலைத் தளம் மூலமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.
புகார் மனுக்கள்: இந்நிலையில் நடிகை கஸ்தூரி தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பார்த்ததாகவும், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: "ராஜராஜ சோழன் தமிழ் பல்கலைக்கழகம்" - நீதிபதி கோரிக்கை!
புகார் டூ வழக்கு: இந்த புகாரின் அடிப்பிடையில், எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதம், இனம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தவறான வதந்திகளை பரப்புவது மொழி, பிராந்திய குழுக்கள் இடையே பகை உணர்வு ஏற்படும் வகையிலும், கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுவது, உள்ளிட்ட 192, 196(1)(a), 353(1)(b) and 353(2) BNS ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பூட்டப்பட்ட வீடு: இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி நடிகை கஸ்தூரிக்கு சம்மன் வழங்க அவருடைய இல்லத்திற்கு எழும்பூர் காவல்துறையினர் சென்றனர். அப்போது அவருடைய வீடு பூட்டி இருந்ததாகவும், அவரது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு நடிகை கஸ்தூரி ஆஜராகாததால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.