சென்னை : வடகிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தால் தியாகராய நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் நேற்று(அக் 15) தங்களது வாகனங்களை கலைவாணர் மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டுச் சென்றனர். இதனையடுத்து போக்குவரத்து போலீசார் அங்குள்ள வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
இருப்பினும் பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்காக அபராதம் விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தால் அது திரும்பப் பெறப்படும். பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படக் கூடாது என்பதால் உடனடியாக தங்களது வாகனங்களை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி இருந்தார்.
பொதுவாக தியாகராய நகர் பகுதியில் மழை பெய்தால் தண்ணீர் செல்வதற்கு இடமின்றி சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து காணப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை பாதுகாக்கும் விதமாக, கலைவாணர் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் கார்களை நிறுத்தி சென்றனர்.
இதையும் படிங்க : வேளச்சேரி மேம்பாலத்தில் மூன்றாவது நாளாக வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்கள்..உரிமையாளர்கள் கூறுவதென்ன?
இதுகுறித்து காரின் உரிமையாளர்கள் கூறுகையில், "வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வாகனங்கள் பழுதடைந்தது. அந்த வாகனங்களை சர்வீஸ் செய்து திரும்ப பெறுவதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் ஆனது. மேலும் அதிகமான செலவும் ஏற்பட்டது.
இதனை தவிர்க்கும் விதமாக கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி இருப்பதால் மழைநீரில் இருந்து பாதுகாக்க முடிகிறது என தெரிவித்தனர். மேலும், கனமழை எவ்வளவு பெய்யும் என கணிக்க முடியாததால் பாதுகாப்பை கருதி வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை( அக் 17) புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே கரையைக் கடப்பதால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தொடர்ந்து 2வது நாளாக கலைவாணர் மேம்பாலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்