சென்னை : ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்காலிற்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு மிக அருகில் கரையைக் கடக்கும். ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து இராயபுரம் மேம்பாலத்தில் வட சென்னை பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய கார்களை இந்த மழை வெள்ளத்தால் சேதம் அடையாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராயபுரம் மேம்பாலத்தில் கார்களை பாதுகாப்பாக்க நிறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டியான கார்த்திக் கூறுகையில், "வாகனத்தின் என்ஜினில் தண்ணீர் சென்று விட்டால் பழுதுபார்க்க ஒரு லட்சம் வரை செலவு ஏற்படுகிறது. மழை வெள்ளத்தில் வாகனங்கள் பழுதடையாமல் இருப்பதற்காக வாகனங்களை மேம்பாலத்தின் மீது நிறுத்தியுள்ளோம்.
கடந்த முறை மழை வெள்ளத்தில் என்னுடைய வாகனம் மழை தண்ணீரில் சிக்கி கொண்டது. அதனால் பாலத்தின் மீது வாகனத்தை நிறுத்தி உள்ளேன். காவல்துறையினர் அபராதம் விதிப்பார்களா என்று சிந்திக்கவில்லை. வாகனத்தில் பழுது ஏற்பட்டால் ஆகும் செலவிற்கு, அபராதம் கட்டிக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை...ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்கள்!
இதையடுத்து பேசிய வாகன ஓட்டி சாகுல் அமீது, "மழை, வெள்ளம் பாதிப்பில் இருந்து வாகனத்தைப் பாதுகாக்க பாலத்தின் மீது வாகனத்தை நிறுத்தியுள்ளேன். என்ஜின் சைலன்சர் ஆகியவற்றுகளில் மழை நீர் சென்றுவிடுவதால் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளேன். வாகன பழுதை தடுக்கவே இவ்வாறு நிறுத்தியுள்ளேன்" என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மாதம் பெய்த கனமழையின் போது இதேபோன்று இராயபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்கள் கார்களை இராயபுரம் உள்ளிட்ட பாலங்களில் நிறுத்தி வைத்தனர். அப்போது போக்குவரத்து போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக கார்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறி அபராதங்கள் விதித்தனர். ஆனால் பொதுமக்கள் மழைக்கு அஞ்சி கார்களை மேம்பாலத்தில் நிறுத்தியதால் அவர்களின் கார்களுக்கு விதித்த அபராதங்கள் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.