சேலம்: புதுக்கோட்டையில் உள்ள அம்மா பட்டணம் பகுதியைச் சேர்ந்த அனிபா என்பவரும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் அனிபா, இஸ்மாயில் உள்பட ஐந்து மாணவர்கள், திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்வதற்காக மூன்று பைக்குகளில் திருச்சியில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
இதில் அனிபாவும், இஸ்மாயிலும் ஒரே பைக்கில் பயணித்துள்ளனர். இருவரும் இன்று காலை சேலம் அருகே உள்ள அரூர் மெயின் ரோடு, சுக்கம்பட்டி அடுத்த கோமாளி வட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பாப்பிரெட்டிபட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக அனிபா ஓட்டிச் சென்ற பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற மாணவர்கள் அனிபா, இஸ்மாயில் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதன் பின்னர் கார், பைக் மீது மோதிய வேகத்தில், சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. அதில் காருக்குள் இருந்த மூன்று பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வீராணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் இருந்த மூன்று பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் அனிபா, இஸ்மாயில் ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்தை வழிமறித்து நடத்துநர்; ஓட்டுநரைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய கும்பல்.. வைரலாகும் வீடியோ!