சென்னை: பிரபல திரைப்பட நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி தொண்டர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, கேப்டன் விஜயகாந்தின் மறைவின் போது பங்கேற்காத அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானவர்கள் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்த அன்றிலிருந்து இன்று வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
அந்த வகையில், கடந்த 125 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து சென்றுள்ளனர். மேலும், அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேமுதிக சார்பில் உணவும் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து, உணவு வழங்கும் முதல் நினைவுச் சின்னமாக விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது.
இதனை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அறிவித்து அதற்கான சான்றிதழையும் கொடுத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிகவின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். இது தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாடகி உமா ரமணன் மறைவு: கணவர் ஏ.வி.ரமணன் வைத்த வேண்டுகோள்!