ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட குடிமல்லூர் பகுதியில், தனியார் பங்களிப்பு மற்றும் 'நமக்கும் நாமே' திட்டத்தின் கீழ் 6.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 19 புதிய துணை சுகாதார நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்தனர்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் அதிகம் நிறைந்த மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு என்பது அதிக அளவில் காணப்படுவதாகவும், இதனைக் கண்டறிய ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்று நோய் கண்டறியும் சோதனை அரசு சார்பில் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 9566 நபர்களுக்கு மேற்கொண்ட புற்றுநோய் பரிசோதனையில், 222 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், 290 பேருக்குக் கருப்பை புற்றுநோயும், 29 நபர்களுக்கு வாய் புற்றுநோயும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளையும், சிகிச்சையை அளித்து உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். அதே போல, தமிழகத்திலேயே ராணிப்பேட்டையில் தான் புற்றுநோய் பாதிப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனிமொழி பெயரில் 30-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு.. விறுவிறுப்படையும் திமுக தேர்தல் பணிகள்!