சென்னை: அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதாரத் தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாற்றுப் புத்தக வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் இன்று (மார்ச்.04) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நூலின் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசுகையில், “கடவுள் நாராயணன் தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு, பல்வேறு வடிவங்களில் காலத்திற்கு ஏற்ப அவதாரம் எடுத்துள்ளார். அதேபோல் அய்யா வைகுண்டர் நாராயணின் அவதாரமாகத் திகழ்கிறார். வைகுண்டர் தோன்றிய சமூக கலாச்சாரக் காலக்கட்டத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.
சனாதன தர்மத்திற்கு ஊறு ஏற்படும் போது கடவுள் நாராயணன் பல அவதாரமெடுக்கிறார். அப்படியான அவதாரமே வைகுண்டர் 192ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்குப் புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சமூக நீதியை உறுதி செய்தார்.
1600ஆம் ஆண்டு கிழக்கு இந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வந்தது. அதற்கு முன்னர் அனைவரும் சமமாகக் கருதப்பட்டனர். ஐரோப்பாவிற்குச் செல்லும் முன் கிறுத்துவம் இந்தியாவிற்கு வந்தது. வெளியிலிருந்து வந்த சிலர் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அழித்தார்கள். கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட இலக்கு மதமாற்றம் செய்வதாகவே அமைந்திருந்தது.
1757ல் பெங்கால் மாகாணம் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியது.பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாகத் திகழ்ந்தது. பாரத்தை அடிமைப்படுத்துவது கடினமாக இருந்தது. மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசினாலும், உணவு முறைகளைக் கொண்டு இருந்தாலும், அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையிலும், சனாதனத் தர்மத்திலும் இருந்தனர்.
இந்தியாவை அடிமையாக்கச் சனாதன தர்மத்தை அழிக்கப் பிரிட்டிஷ் முடிவெடுத்தது. இந்தியாவை ஆள்வதற்கு அதற்குக் கிறிஸ்துவ மதமாற்றத்தை பிரிட்டிஷ் அரசு கொள்கையாகக் கொண்டது. 1813ஆம் ஆண்டு இந்தியாவிற்கான பிரிட்டிஷ் சட்டம் உருவாக்கப்பட்டது. சனாதனத் தர்மத்தை அழிக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்தியது. பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்காதவர்களையும், தன்னார்வலர்களாகத் தேர்வு செய்து பைபிள் கற்றுக் கொடுத்து மதமாற்றம் செய்ய வேண்டும் என அனுப்பி வைத்தனர்.
பள்ளிப் படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. அவர்கள் மெட்ராஸ் மாகாணத்தில் மக்களைக் கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு உட்படுத்தினர். மிஷினரி பள்ளிகள் துவக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் ஆளுநர் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் இது வரலாறு. எனக்கு ஏசுவைப் பிடிக்கும், பைபிள் பிடிக்கும் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்.
எல்லாம் பொய்: 1889 - 90 ஆயிரம் மெட்ராஸ் மாகாண மக்கள் கஜூலு லஷ்ஜி நரசிம்மர் தலைமையில் கையெழுத்திட்டு பிரிட்டிஷ் அரசிடம் வழங்கினர். குழந்தைகளைக் கிருத்துவ மதமாற்றம் மேற்கொள்வதற்கும் கிறுத்துவத்திற்கு மதமாறினால் தான் பள்ளிகளில் இடம் கிடைக்கும் என்னும் பிரிட்டிஷ் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது.
அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்குப் புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சமூக நீதியை உறுதி செய்தார். அவர் கொண்டிருந்த பார்வை, அனைவருக்கும் சமமான நலத்திட்ட அணுகலையும் திட்டங்கள் அனைவருக்குமானது என ஒருவரைக் கூட விட்டு விடாமல் உறுதிப்படுத்தும்.
பிரதமர் மோடி தலைமையிலான அனைவரையும் உள்ளடக்கிய பாரதத்தில் உயிர்ப்புடன் விளங்கி சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் என்ற உள்ளடக்கிய வளர்ச்சி மாடலில் பிரதிபலிக்கிறது” என பேசினார்.
இதையும் படிங்க: "ஆதித்யா எல்1 ஏவிய அதேநாளில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானேன்" - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!