திருச்சி: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற, திருச்சி இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் மற்றும் இளைஞர் அணி துணை செயலாளர் உறையூர் கலை ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி உறையூரில் உள்ள கலை அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து மாலை அணிவித்து கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின் அங்கிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இளைஞரணி செயலாளர் சீனிவாசனின் இல்லத்திற்கு புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டு சென்றார். இது குறித்து உயிரிழந்த கலையின் உறவினர்கள் கூறுகையில்," பல ஆண்டுகளாக விஜய்யின் ரசிகராக இருந்த கலை நேற்று அவரது மாநாட்டிற்கு செல்லும் பொழுது விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் இவர் முதலமைச்சராகி என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு புத்தாடை வாங்கிவிட்டு வீடு திரும்பிய தந்தை, மகள் விபத்தில் பலி.. திருவாரூர் அருகே சோகம்!
மேலும் சின்ன பிள்ளையாக இருந்ததில் இருந்து விஜய் ரசிகராகவே இருந்தார். அவருக்காக எவ்வளவோ செலவும் செய்துள்ளார். விஜய்யும் அரசியலுக்கும் வந்துவிட்டார். அந்த மாநாட்டுக்கு செல்லும்போது விபத்து நிகழ்ந்துவிட்டது. ஆனால் மாநாட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் விஜய்க்காகவே தனது வாழ்நாளை இழந்த அவரது ரசிகர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலிருந்து எந்த வித ஆறுதலோ நிதி உதவியோ செய்யவில்லை என ஆதங்கத்துடன்" தெரிவித்தனர். இது குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கூறுகையில்," இவர்கள் இருவரின் உயிரிழப்பு கழகத்திற்கு பேரிழப்பு . அவர்கள் இருவரது குடும்பத்திற்கும் எங்களுஃபைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக வெற்றி கழகம் செய்யும்" என தெரிவித்தார். மேலும் மாநாட்டில் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை? என அங்குள்ள உறவினர்கள் கேட்டதற்கு அதற்காகத்தான் நான் நேரில் வந்துள்ளேன் என கூறினார்.