சென்னை: தென் மாவட்டங்களுக்கு தற்பொழுது இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அனைத்தும் ஜனவரி 30ஆம் தேதி முதல் சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அனைத்தும், ஜனவரி 30ஆம் தேதி முதல் சென்னை, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றிலிருந்து இயக்கப்படும்.
மேலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் அதிகப்படியான பேருந்துகளும், அதன்பிறகு பயணிகள் அளவிற்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். தற்போது கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையத்திலிருந்து (MMBT) இயக்கப்படும் வழித்தடங்கள் மற்றும் பேருந்து புறப்பாடுகள் எண்ணிக்கை விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
வ.எண் | வழித்தடங்கள் | கிளாம்பாக்கம் (KCBT) | மாதவரம் (MMBT) |
---|---|---|---|
1. | திருச்சி | 118 | 18 |
2. | சேலம் | 66 | 17 |
3. | விருத்தாசலம் | 30 | 6 |
4. | கள்ளக்குறிச்சி | 50 | 16 |
5. | விழுப்புரம் | 59 | 16 |
6. | கும்பகோணம் | 52 | 14 |
7. | சிதம்பரம் | 21 | 5 |
8. | நெய்வேலி | 46 | 11 |
9. | கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம் | 32 | 5 |
10. | புதுச்சேரி (வழி) திண்டிவனம் | 35 | 10 |
11. | திருவண்ணாமலை (வழி) செஞ்சி | 125 | 22 |
12. | போளூர், வந்தவாசி | 30, 46 | 20 |
மொத்தம் | 710 | 160 |
திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம், புதுச்சேரி (வழி) திண்டிவனம், திருவண்ணாமலை (வழி) செஞ்சி, போளூர், வந்தவாசி ஆகிய ஊர்களுக்கு கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து முனையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் இயக்கப்பட மாட்டாது. இந்த பேருந்து இயக்க மாற்றத்தினால் பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் தென்மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றடைந்து, அதன்பின் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும். ஆகையால் பொதுமக்கள் பேருந்துகள் இயக்கத்திற்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தினை அமைத்துக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.