சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி இன்று காலை மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் மாயாவதி உரையாற்றினார்.
அப்போது அவர், "தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்க பாடுபட்டவர் ஆம்ஸ்ட்ராங். அவரது படுகொலை செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வீட்டுக்கு வெளியே இதுபோன்ற நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. சட்டம் - ஒழுங்கு மாநிலத்தில் சரியில்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் தெரிகிறது. கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களான தங்கள் நிலைமை என்ன என்று தலித் மக்கள் அஞ்சுகிறார்கள்.
எங்கள் கட்சி மிகவும் துயரமாக உள்ளது. சட்டத்தை எங்கள் கட்சியினர் கையில் எடுக்கமாட்டார்கள். ஆனால், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது? தமிழக அரசு இந்த கொலை வழக்கை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரைக்க வேண்டும்.
அம்பேத்கர் மீதான பற்றின் காரணமாக, எங்கள் கட்சியில் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். இந்தக் கட்சியை முன்னெடுத்து சென்றவர் அவர். அவரது வழியில் நீங்களும் (கட்சித் தொண்டர்கள்) கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்" என்று மாயாவதி பேசினார்.
இந்த நிகழ்வின்போது, மாயாவதியுடன் விசிக தவைவர் திருமாவளவன், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி மலர்வளையம் வைத்து அஞ்சலி