சென்னை: தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா (21). கானா பாடல்கள் பாடும் இவர், இறுதி ஊர்வல இசை கலைஞராக பணிபுரிந்து வந்தார். இவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த 19 வயது பெண்ணை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரிய வந்த உடனே, அவசர அவசரமாக அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேறு மாப்பிள்ளை பார்த்ததாகவும் கூறப்படும் நிலையில், அந்த மாப்பிள்ளைக்கு ஜீவா அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இது குறித்து பெண்ணின் தந்தை கோவிந்தராஜனுக்கு தெரிய வரவே, கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன்கள் ஜீவாவைக் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (பிப்.3) மாலை அந்த பெண்ணுடன் பெருங்களத்தூர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகே ஜீவா பேசிக்கொண்டிருந்தபோது பெண்ணின் சகோதரர்கள், அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை தட்டி கேட்பதற்காக ஜீவா தனது நண்பர்களுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டபோது, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர்.
போலீசாரைப் பார்த்தவுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதன் பின்னர், இரவு 11 மணி அளவில் ஜீவா மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்தபோது, பெண்ணின் சகோதரர்கள் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து ஜீவாவுடன் வந்தவர்களை அடித்து விரட்டி உள்ளனர். இதில் ஜீவா மட்டும் அவர்களிடம் தனியாக சிக்கி உள்ளார்.
அதன் பிறகு, ஜீவாவை அங்குள்ள சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்று, அரிவாளால் தலையில் வெட்டியும், தலையில் கல்லைத் தூக்கி போட்டும் கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். அப்பொழுது சுடுகாட்டில் இருந்த நாய் ஒன்று, இவர்களைப் பார்த்து குரைத்ததால், நாயையும் அடித்து கொலை செய்துவிட்டு, பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சுடுகாட்டில் ஜீவா கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக பீர்க்கன்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜீவாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் கொலையாளிகளை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கொலையாளிகள் மண்ணிவாக்கம் அருகே உள்ள ஏரியின் அருகே இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விரைந்து சென்று அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த படுகொலை தொடர்பாக விஜய் (21), அஜித் (24), அரவிந்தன் (22) ஆகிய மூவரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தங்கையை காதலிக்கக்கூடாது என கொடூரமாக கொலை செய்த சம்பவம், பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் பெண் எரித்து கொலை; இன்ஸ்டாகிராம் காதலால் நேர்ந்த சோகம்!