திருச்சி: திருச்சியில் உள்ள பறவைகள் சாலையில், தனியார் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் சார்பாக பழைய கார்கள் மற்றும் பைக்குகளின் விண்டேஜ் கண்காட்சி இன்று (மே 30) தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய கார்கள் மற்றும் பைக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இந்த கண்காட்சியானது, பிரிட்டிஷ் ஆட்சிக்கால பழமை மற்றும் தொழில் நுட்பம் குறித்து இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 1) மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு இலவசமாக திறக்கப்பட உள்ளது.
கண்காட்சியில் இடம்பெற்றவை: இந்த கண்காட்சியில் 1942ஆம் ஆண்டு முதல் நாடு சுதந்திரம் அடைந்து, தொழில்நுட்ப வளர்ச்சி அடையும் வரை தயாரிக்கப்பட்ட கார்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உலக நிகழ்வான இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 6 கார்கள், 66 பைக்குகள் உள்ளன. மேலும், அங்கு பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ரேடியோ, தொலைபேசி, கடிகாரம், அழகு சாதனப் பொருட்கள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவையும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கார் மாடல்களை சேகரித்த காதலன்: இந்த கண்காட்சியை நடத்திய டி ஜே அழகேந்திரன் என்னும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், “எனக்கு ஒன்பது வயதில் கார்கள் மீது ஆசை உருவானது. அதனாலேயே அன்றிலிருந்து கார்களை சேகரிக்கத் தொடங்கினேன். கடந்த 28 வருடத்தில் சுமார் 66 பழைய பைக்குகளை சேகரித்து வைத்துள்ளேன்.
இந்த கண்காட்சியில் மிகப் பழமையான MDU 457 என்னும் கார் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ராடிலேயே தயார் செய்யப்பட்டது. இதனை கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருப்பது சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, பைக் உற்பத்தில் ஈடுபட்ட ஜாவா நிறுவனத்தின் 37 வருட தயாரிப்பின் 28 கார் மாடல்களை சேகரித்து வைத்துள்ளேன். ஜாவா வண்டிகள் 1959ஆம் ஆண்டு மைசூரில் நிறுவப்பட்டு, 1996ஆம் ஆண்டு மூடப்பட்டு இருந்தாலும், நான் அவற்றை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் காட்டினேன்.
அது மட்டுமின்றி, இந்த மோட்டார் பைக்குகளை பராமரிப்பதற்காக அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளை வைத்து அதன் ஒரிஜினாலிட்டி சற்றும் மாறாமல் பராமரித்து வருகிறேன். இவ்வாறு சேகரித்த வாகனங்களை வரும் நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஆர்வத்தை தூண்டும் வகையிலும் நேரடியாக இங்கு வந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
பார்வையாளர்களைக் கவர்ந்த கண்காட்சி: மேலும், இக்கண்காட்சி குறித்து பார்வையாளர் ஒருவர் கூறுகையில், “இதுபோன்று பழங்காலத்து கார் மற்றும் பைக் கண்காட்சி சென்னை, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் தான் நடைபெறும். தற்போது திருச்சியில் நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மேலும், இங்கு வைக்கப்பட்டிருக்கு கார் மற்றும் பைக்குகளை பார்க்கும்போது நல்ல அனுபவம் கிடைப்பதாகவும், அவற்றின் வரலாறுகளை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்ததாகவும் கூறினார். மேலும், சிறு வயது ஞாபகங்கள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த கண்காட்சியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பழங்காலத்து கார்களையும், பைக்குகளையும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள்.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்!