கோவை: கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பத்ம சேசாஸ்திரி (PSBB) தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்றிரவு (மார்ச் 3) இப்பள்ளியின் மின்னஞ்சலுக்கு வந்த இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த கோவை போலீசார், அதிகாலை 2 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில், சந்தேகத்திற்கும் இடமான வகையில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.
ஆகையால், பள்ளிக்கு தேர்வு எழுத வரும் மாணவர்களை முழுமையான சோதனைக்கு பின்னரே அனுப்புவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பள்ளியிலும் வெடிகுண்டு வெடிக்கும் என மெயிலில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த வாரம் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் PSBB பள்ளிகளுக்கு மிரட்டல் வந்த நிலையில், தற்போது மீண்டும் இப்பள்ளிக்கு மிரட்டல் வந்துள்ளதால், தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்; 8.20 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்!