சென்னை: அரசு ஸ்டான்லி (Stanley) மருத்துவமனையில் உலக உயர் இரத்த அழுத்தம் தினத்தையொட்டி இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இரண்டாண்டு நிறைவையொட்டி, 'மாஸ்டர் ஹெல்த் செக்-அப்' நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி(Gagandeep Singh Bedi), மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறியதாவது:
உயர் ரத்த அழுத்தம் (High blood pressure) குறித்து பொதுமக்களிடையே அதிகமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அந்த வகையில், இன்று ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து மருத்துவர்களும், துறை சார்பாக மக்களிடையே உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் எந்தெந்த மாதிரி பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரத்த அழுத்தம் இருந்தால் உடலில் சிறிய 'கல்' உருவாக வாய்ப்புள்ளது. இதனால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அதன் எதிரொலியாக இருதய பாதிப்பும் ஏற்படும்.
நம்முடைய சமுதாயத்தில் 24 சதவீதம் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், 10 சதவீதம் மக்களுக்கு இரத்தம் அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவை இருக்கிறது. அதிக உப்பு (salt) பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களை உட்கொண்டால் ரத்த அழுத்த நோய் உருவாகும். எனவே, உப்பு அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தினமும் வேலை பார்த்து வருகிறார்கள். உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
தினந்தோறும் பத்தாயிரம் அடி அல்லது எட்டு கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா பயிற்சி மேற்கொண்டால் மூளை சரியான முறையில் செயல்படும். அதிக உடல் எடை இருந்தால் ரத்த அழுத்த நோய் ஏற்படும். தினந்தோறும் 8 மணி நேரம் சரியான உறக்கம் இருக்க வேண்டும். உறக்கம் சரியாக இல்லாவிட்டாலும் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாதந்தோறும் மருத்துவர்களை அணுக வேண்டும்” என்று ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் மக்கள்; வனத் துறை எச்சரிக்கை! - Sakkaraipallam Floods