சென்னை: சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்த நான்கு நாட்களாக கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் தமிழக அரசு அறிவித்துள்ள அரசு பணிகளில் ஒரு சதவிகித வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய முன்தினம் (பிப்.14) கோடம்பாக்கம் மேம்பாலம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த நிலையில், நேற்று (பிப்.15) சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் எதிரில் உள்ள ஈவெரா நெடுஞ்சாலையில் அமர்ந்தும், படுத்துக்கொண்டும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் நோக்கி வரும் வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் சாலையில் அணிவகுத்து நின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து காவலர்கள் அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்றுவழியில் திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள், மாற்றுவழியில் செல்ல முடியாமல் சாலையிலே அணிவகுத்து நின்றன.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களைக் கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் ஈவெரா சாலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: புதுச்சேரி சட்டசபை வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி கூடுகிறது - சபாநாயகர் செல்வம் அறிவிப்பு!