சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருக்கும் புறப்பாடு பகுதியில் இன்று காலை வழக்கம் போல் பயணிகள் டிக்கெட் பரிசோதனைகள் செய்துவிட்டு உள்ளே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் புறப்பாடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புறப்பாடு பகுதி டி1 கேட் அருகே விமான நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் ட்ராலி வண்டியில் கேட்பாரற்று, கருப்பு நிற பை ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அங்கு சென்று இது யாருடைய பை என பயணிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த பயணிகள் தங்களுடைய பை இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து வெகு நேரமாக யாரும் அந்தப் பையை எடுக்காததால் பைக்குள் ஏதாவது மர்ம பொருள் இருக்குமா என மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். மேலும், அதில் வெடிகுண்டு ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், அங்கிருந்த பயணிகளை உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தினர்.
பின் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு வந்து சோதனை செய்வதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தயாரான நிலையில், பயணிகளுள் ஒருவர் திடீரென வந்து தனது பை தான் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கழிவறைக்குச் சென்று வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பையினுள் மர்ம பொருட்கள் எதுவுமில்லை என தெரிவித்தார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் பையைத் திறந்து சோதனை செய்தனர். அதில் மர்ம பொருள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இதுபோன்று விமான நிலையங்களில் உடமைகளை தனியாக வைத்துவிட்டு எங்கும் செல்லக்கூடாது, அப்படி சென்றால் அபராதம் கட்ட வேண்டும் என அதிகாரிகள் அவரை எச்சரித்தனர். பின் அந்த பயணி எனக்கு இதுபற்றி தெரியாது எனக் கூறி மன்னிப்பு கேட்டார். பின்னர், இதுபோன்று நடக்காமல் கவனமாக உடமைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: குறுக்கே வந்த நாய்.. கண்இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் பலி!