திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாட்டபத்து பகுதியில் உள்ள சுடுகாடு ஒன்றிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியுடன் பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த பேச்சுவார்த்தை முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கிற்கு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல திரைத்துறையினருடன் உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது. இது இந்த சமுதாயத்துக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
திருநெல்வேலி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுமா அல்லது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திருநெல்வேலி தொகுதியை பொறுத்தவரைக்கும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுவார். சரத்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது மிகப்பெரிய மனிதாபிமானமற்ற செயல். இந்தியாவில் இதுபோல் எந்த பகுதியிலும் நடைபெறக்கூடாது. இது போன்ற செயலில் யார் ஈடுபட்டாலும், பாரபட்சம் பார்க்காமல் தூக்கிலிட வேண்டும்” என கூறினார்.