சென்னை: அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மைத்ரேயன் அதிமுகாவில் மீண்டும் இணைந்திருப்பதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது அணியை சேர்ந்தவர்கள் நீக்கப்பட்டபோது மைத்ரேயனும் கட்சியிலிருந்து நீக்கிப்பட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மைத்ரேயன் 2023ஆம் ஆண்டு பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், 'புரட்சித் தமிழர்'… pic.twitter.com/hkRI5IezhU
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) September 12, 2024
இதையும் படிங்க: மதுரை தீ விபத்து: தனியார் விடுதியை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? செல்லூர் ராஜு கேள்வி; அமைச்சர் பிடிஆர் விளக்கம்!
பாஜவில் மைத்ரேயனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த மாதிரி எந்த முக்கிய பொறுப்பும் கொடுக்காததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்பட்டு இருந்தாலும் சமீபகாலமாக அதிமுகவின் நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் கலந்து கொண்டு வந்திருக்கிறார்.
இதற்கிடையே பாஜகவில் அதிருப்தியில் இருந்த மைத்ரேயனை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்துப் பேசினார். "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று மைத்ரேயன் கூறியிருந்தார். அவர் இவ்வாறு கூறிய சில மணி நேரத்திலேயே, மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் என்ற அறிவிப்பு அதிமுக தரப்பில் இருந்து வெளியாகி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி மைத்ரேயன், தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ள ஹெச்.ராஜாவை சந்தித்து தன்னுடைய பாஜகவின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்திருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.