சென்னை: மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் "இன்று காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகிய மூன்று பேருக்கும் எந்த பாகுபாடும் இன்றி நாங்கள் மரியாதை செலுத்த வந்திருக்கிறோம். விசிக இன்று மது ஒழிப்பு மாநாடு என்று நடத்துகிறார்கள். சிறுத்தை ஆரம்பித்துச் சிறுத்துப் போய்க் கொண்டிருக்கிறது என நான் ஏற்கனவே தெரிவித்தேன்.
அந்த வகையில், இந்த மாநாடும் அப்படிதான். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அவர்கள் கட்சியில் ஆதரவு இல்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன் இதுதான் அவர்களின் கொள்கை. இன்று காலை காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த திருமாவளவன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் காந்தியை தவிர்த்து விட்டு காமராஜருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.
மது ஒழிப்பு மாநாடும் நடத்தும் திருமாவளவன் ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று எனக்கு தெரியவில்லை. தமிழக அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள 36 மருத்துவ கல்லூரிகளில் 11 டீன்கள் கிடையாது, பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் கிடையாது.
துணைவேந்தர் நியமிப்பதில் அவசரம் காட்ட வில்லை, ஆனால் துணை முதல்வர் நியமிப்பதில் அவசரம் காட்டினார்கள் . நேர்மறையாக டீன் நியமிப்பதில் ஏன் தாமதம்.? அவர்கள் ஏதோ எதிர்பார்த்துக் கொண்டு நியமிப்பதன் காரணமாக இந்த பிரச்சனை நிலவுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: "இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம்" - பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா எச்சரிக்கை!
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளுக்கும் மூலவராக முதலமைச்சர் செயல்படுகிறார் என்பதே எனது கருத்து. முதலில் இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தட்டும், அதன் பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துகிறோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அதற்கு நான் சவால் விடுகிறேன், தமிழகத்தில் மதுவிலக்கு என்று அறிவிப்பு வெளியிடுங்கள். அதன் பின்னர், நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். படிப்பதற்கு ஒரு கொள்கை கொண்டால் அதை நீங்கள் ஒப்பு கொள்ள மாட்டீர்கள். இந்நிலையில் குடிப்பதற்கு கொள்கை கொண்டால் அதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்,"போக்சோ சட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தது 12 நாட்களுக்கு பிறகு தான் தகவல் பதிவு செய்துள்ளார்கள். அதனால் சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழக காவல்துறை மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை செய்து, உயர் நீதிமன்றத்தில் இருந்து அனுமதி வாங்கும் சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.
அதிமுகவின் 10% வாக்குகள் குறைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து, நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் வலுவான கூட்டணி அமையும். அப்போது நிச்சியம் ஆட்சி மாற்றம் நிச்சயமாக ஏற்படும் என நாம் எதிர்பார்க்கலாம்" என தெரிவித்தார்.