சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி-ஐ இன்று (ஜூன் 24) காலை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுத்தனர்.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தமிழக ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்தோம். குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து இருப்பது, தமிழக அரசு அதை கொண்டு செல்கின்ற முறை சரியாக இல்லை. இதில் திமுகவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் சிபிசிஐடி விசாரணை கொண்டு செல்வது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பல பேர் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள். பலபேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதனை புதன்கிழமை தான் கண்டுபிடித்ததாக கூறுகின்றனர்.
ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று பலபேர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள்.அதனை மாவட்ட தலைமை கண்டுபிடிக்காமல் விட்டுள்ளது. நிர்வாகம் கவனிக்க தவறி உள்ளது. இந்த பிரச்சனையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அங்கு துறை ரீதியாக அமைச்சரும், முதலமைச்சரும் சென்று பார்க்கவில்லை ஆகவே தமிழக அரசு மக்களை எந்த அளவில் மதிக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. பாஜக தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது, அவர்களின் போராட்டத்தை எதிர்த்து பலரும் கைது செய்யப்பட்டார்கள், மேலும் பெண்கள் சிலரை மோசமாக நடத்தப்பட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல்வாதியாக பார்க்காமல் குற்றவாளியாக நடத்தியுள்ளனர்.
மடியில் கனமில்லை என்றால் சிபிஐ-க்கு அனுமதிக்க வேண்டியது தானே. திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது. குற்றங்களை மறைக்க பார்க்கிறது, குற்றவாளிகள் அவர்களில் இருப்பதால் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறுகிறார்கள். எல்லாத்துக்கும் மேலாக முதலமைச்சர் ஏன் தற்போது வரை அந்த இடத்திற்கு செல்லவில்லை. கருணாபுரத்திற்கு ஒரு கருணை கிடைக்காதா? கள்ளக்குறிச்சியில் ஒரு நியாயம் கிடைக்காதா? என்பதுதான் இப்பொழுது முக்கியமான ஒன்றாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதையில் தகராறு செய்த மூத்த மகன் கொலை; அப்பா, இளைய மகன் கைது! - chennai murder