தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளருமான தங்க வரதராஜன், கும்பகோணத்தில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஏப்.26) முற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சிக்கு, இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிக்கும் நக்சல் சிந்தனை வந்துள்ளது. உலக நாடுகள் பலவற்றில் இந்த சிந்தனை காணாமல் போய்விட்டது. இதனை 140 கோடி இந்திய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இதற்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று தான் பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசினார். மதத்தின் ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது என சட்ட மேதை அம்பேத்கரே கூறியுள்ளார். இந்த நிலையில், தவறான பொய் பிரச்சாரங்கள் வாயிலாக அவதூறு பரப்பி, ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மக்களைக் குழப்பி, பிரச்னையைத் திசை திருப்புகிறது.
உலக அளவில் இந்தியாவின் பெருமை வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அதனை காங்கிரஸ் கட்சி கொச்சைப்படுத்தி, அந்நிய சக்திகள் உதவியோடு உதாசீனப்படுத்தி, சீரழிக்க முயல்கிறது. மோடியின் கியாரண்டி என்பது நமது நாடுகளைக் கடந்து உலக நாடுகளின் வரிசையில் மிகப்பெரிய நற்பெயரை நமது நாட்டிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
இதன் காரணமாகத்தான், உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் நேரத்தில் மோடியின் வேண்டுகோளை அடுத்து, இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக அங்கிருந்து மீட்கப்பட்டனர். தற்போது கூட, எட்டு தூக்கு தண்டனை கைதிகள் கத்தார் நாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், "தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும். மோடிக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். தங்களது ஊழல்களில் இருந்து தப்பிக்கத்தான் மோடிக்கு எதிராக இந்த கூட்டணியை அமைத்துள்ளார்கள். மேலும், படிப்படியாக ஊழல் செய்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் யாரும் தப்ப முடியாது. அனைவரும் தண்டனைக்குள்ளாவார்கள், சிறைக்குச் செல்வார்கள் என்பது உறுதி" என்று கூறினார்.
இதையும் படிங்க: பெண் விஏஓ மீது தாக்குதல் நடத்தியதாக திமுக மாவட்ட கவுன்சிலர் கைது.. அண்ணாமலை கண்டனம்!