சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், இன்று (ஏப்.25) பாஜக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்பதுடன் சேர்த்து, பொருளாதார ரீதியான கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, சாதிவாரிக் கணக்கெடுப்புடன் பொருளாதார கணக்கெடுப்பை எதற்கு எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவரின் பொருளாதாரம் என்பது, அவரது உழைப்பால் சேர்க்கப்பட்டது. அவரது உழைப்பை எப்படி பிறருக்கு பிரித்துக் கொடுக்க முடியும்.
2006ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இதேபோன்று ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அந்த கருத்தையேதான் இப்போது ராகுல் காந்தியும் சொல்கிறார். தேர்தல் அறிக்கையிலும் இதை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களது இந்தக் கருத்துக்கு பதிலளித்த பிரதமர், காங்கிரசார் பிரித்துக்கொடுக்கும் பொருளாதாரம் ஊடுருவல்காரர்களுக்கு சென்று சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் கேள்வி எழுப்பினார். ஆனால், அதை பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்து கூறியதாக ராகுல் காந்தி தவறாகத் திரித்து மக்களை திசை திருப்பி குற்றம் சாட்டுகிறார்.
ஊடுருவல்காரர்கள் என்பவர்கள், நம் நாட்டின் குடிமக்கள் கிடையாது. வங்கதேசத்தில் இருந்தோ, ரோஹின்யாவில் இருந்தோ வருபவர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. உலக அளவில் 54 நாடுகள் ஊடுருவல்காரர்களை திருப்பி அனுப்பியுள்ளது. இலங்கைத் தமிழர்களை இவர்களுடன் நாங்கள் சேர்க்கமாட்டோம். மறுபுறம் அவர்கள் என்னதான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் மோடி என திசைதிருப்பினாலும் கண்டிப்பாக பாஜக 3வது முறை ஆட்சியைப் பிடிக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "என் ஆளுங்க தான் ஆனால் பணம் என்னுடையது இல்லை"- நயினார் நாகேந்திரன் கூறுவது என்ன?