விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீசார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர் என்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், மெத்தனால் புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் குறித்தும், பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா இன்று (சனிக்கிழமை) நேரில் ஆஜரானார்.
அவரிடம் சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அழைக்கும்போது வர வேண்டும் எனக்கூறி அவரை அனுப்பி வைத்தனர். இவருடைய வருகையை தொடர்ந்து, விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஜி.சூர்யா, “கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பத்திரிகையில் வந்த செய்தியினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன். இதை ஒரு காரணமாக வைத்து, இவ்வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கில் என்னை சாட்சியாக சேர்த்துள்ளனர்.
மேலும், உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீசார், அரசியல் அழுத்தம் காரணமாக பாஜகவை சார்ந்த என்னை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இது தேவையற்ற ஒன்று. சிபிசிஐடி போலீசார் திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது" - சிபிஐ டி.ராஜா விமர்சணம்! - CPI General Secretary D Raja