கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென்று வாந்தி, வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவர்களில், சிகிச்சை பெற்று வந்த 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையம், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திராவிட முன்னேற்ற கழக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சசிகலா உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
'முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்': முன்னதாக, கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், அவர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும் எனவும் கூறிய ஈபிஎஸ், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்: அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து ஜூன் 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!