சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று (பிப்.15) போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில், மகளிர் சங்கமம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது, “மத்திய அரசின் ஆட்சிக்கு அச்சாணியாக இருப்பவர்கள் பெண்கள். பெண்களை மையப்படுத்தி பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். பிரதமர் மோடி, அவரது தாயை நேசித்தவர் என்பதால்தான், பெண்களை ஒவ்வொரு இடத்திலும் முன்னிலைப்படுத்தி வருகிறார். பெண் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக திட்டம் கொண்டு வந்தவர், பிரதமர் மோடி.
100 சதவீதம் வீடுகளில், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், இந்தியாவில் 10 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் பெண்கள் பெயரில் கட்டப்பட்டுள்ளது. எம்.பி. கனிமொழி, எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் போன்றவர்கள் பதவிக்கு வருவதற்காக நாங்கள் அரசியலில் இல்லை. சென்னையில் உள்ள திமுக எம்பிக்கள் அனைவரும் வாரிசு அடிப்படையில் வந்தவர்கள். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக நாங்கள் பாடுபடுகிறோம்.
திமுகவைப் பொறுத்தவரை, அவர்களின் குடும்பத்தினருக்கு சீட்டு கொடுப்பார்கள். ஆனால், பாஜகவில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீட்டு கிடைக்கும். சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், அந்த பணத்தை போட்டு கொடுப்பதற்கான ரூ.50 பைசா மதிப்புள்ள கவரைத்தான் மு.க.ஸ்டாலின் கொடுத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக,400 சீட்டா, 450 சீட்டா என்பது தமிழக மக்களின் கைகளில் உள்ளது. நம்முடைய வேட்பாளர் பெயர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி வாக்கு கொடுத்தால், அவற்றை சரியாக செய்வார். தமிழகத்தில் நடக்கும் ஆட்சி எங்கே போகுது என்று தெரியவில்லை. வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்றால், பேருந்து நிலையத்திற்குச் செல்வோம். ஆனால், தற்போது பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கே வெளியூருக்குச் செல்ல வேண்டிய கடினமாக நிலை உள்ளது" என்று கூறினார்.
இறுதியாக கூட்டம் முடிந்து அண்ணாமலை சென்ற நிலையில், அவருடன் பெண்கள் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்பொழுது, மேடையின் ஒரு பகுதி பலகை உடைந்ததால், பரபரப்பு நிலவியது. மேலும், சில பெண்கள் தாடியை எடுக்குமாறு அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்’ யாத்திரை முடிந்த 10 நாட்களில் தாடி எடுப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: "போலீஸ் பாதுகாப்பு கேட்பது பேஷனாகி விட்டது" சூர்யா சிவாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!