சென்னை: சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முதலமைச்சர் என் மீது கிரிமினல் அவதூறு வழக்கு போட்டுள்ளார். போதை வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடனான தொடர்பு பற்றி திமுக விளக்கம் அளிக்க வேண்டும். என் மீது வன்மத்தை தீர்த்துக் கொள்வது அதற்கான பதில் அல்ல. மக்கள் பதில் கேட்டால் சொல்லாமல் இருப்பதால், மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீது சந்தேகம் அதிகமாகி வருகிறது. லேப் (Lab) இல்லாமல் சிந்தடிக் டிரக் (Synthetic Drug) தயாரிக்க முடியாது.
இப்போது சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான குடோன்களில் நடைபெற்று வரும் சோதனைகளை வைத்துப் பார்க்கையில், சென்னையில் இந்த போதைப்பொருள் தயாரிக்க லேப் வைத்து நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. எங்கள் சந்தேகங்களுக்கு தொடர்ந்து விடை கிடைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் முதலமைச்சர், 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைப் போல, என் மீது வழக்கு தொடர்ந்து, தான் தவறு ஏதும் செய்யாததாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில்தான் போதைப்பொருள் அதிகளவு கைப்பற்றப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதில் அளித்த அண்ணாமலை, "முன்னாள் முதலமைச்சர் எதுவும் தெரியாமல் பேசுவது ஆச்சரியம் மட்டுமல்ல, வருத்தம் மட்டுமல்ல, நகைச்சுவையாகவும் உள்ளது.
போதைப்பொருட்கள் எல்லையோர மாநிலங்கள் வழியாகத்தான் உள்ளே வரும். அதை அங்கு மடக்கிப் பிடிப்பது என்பது சாதனை. குறிப்பாக, முந்த்ரா தான் போதைபொருள் உள்ளே வருவதற்கான ஏரியாவாக உள்ளது. இப்படித்தான், கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில், குஜராத்தில் போதைப்பொருட்களுடன் ஒரு படகை பிடித்தார்கள்.
அதில் இருந்த போதைப்பொருட்கள் ஈரானில் இருந்து தமிழகத்திற்கு வர இருந்த போதைப்பொருட்கள். அதை முந்த்ராவில் பிடித்ததற்கு அவார்டு கொடுக்க வேண்டும். எல்லையோர மாநிலங்களில் போதைப்பொருட்களைப் பிடிப்பது என்பது திறமை. இதனை புரிந்துகொள்ளாமல், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பேசக்கூடாது.
நாகலாந்து, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் போதைப்பொருட்களை பிடிப்பது, காவல் துறையினரின் திறமையைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் மலைப் பகுதிகளில் கஞ்சா வளர்க்கிறார்களா அல்லது நாம் கஞ்சா பயிரிட்டு அறுவடை செய்கிறோமா? தமிழ்நாட்டில் பாஜக வைக்கக்கூடிய குற்றச்சாட்டு என்பது, ஆளுங்கட்சிக்கு இருக்கக்கூடிய தொடர்பைக் காட்டுகிறது.
பங்காளி கட்சி என்பதை மறுபடியும் எடப்பாடி ஊர்ஜிதம் செய்கிறார். எல்லை மாநிலங்களில் போதைப்பொருட்களைப் பிடிப்பதற்கும், தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்குள் கோடிக்கணக்கான சிந்தடிக் டிரக்ஸ்களை பிடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் யாரைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு பேசி வருகிறார்?" எனக் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீது ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்த திமுக..