கோயம்புத்தூர்: உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் நேற்று (ஜன.22) பிரதமர் மோடி தலைமையில், ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக மற்றும் பாஜகவினருக்குச் சனாதனம் தொடர்பாக மோதலும் முற்றி வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள திமுக சட்ட சீர்திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் அவரது முகநூல் பக்கத்தில், "அயோத்தி ராமர் கோயில் திறப்பு... ராமருக்குப் பிடித்த மாட்டுக்கறி பிரியாணி ரெடி" என்ற சர்ச்சைக்குரிய பதிவு பொள்ளாச்சி நகர பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால், பாஜக நகரத் தலைவர் பரமகுரு தலைமையில், தென்றல் செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாகத் தகவல் கிடைத்த திமுகவினரும் வரத் தொடங்கினர். மேலும், வீட்டில் உள்ளே இருந்த தென்றல் செல்வராஜ், மகன் மணிமாறன் மற்றும் பாஜகவினருக்குக் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும், அனுமதி இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ராமருக்கு மாட்டுக்கறி பிரியாணி என்ற முகநூல் பதிவு சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ராமர் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு!