திருப்பூர்: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிப்.27ஆம் தேதி தமிழகம் வருகிறார், பிரதமர் நரேந்திர மோடி. இந்த பயணத்தின் முதல் நாளான பிப்.27ஆம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, பிப்.28ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, குலசேகரன்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய ராக்கெட் ஏவுதள திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இது மட்டுமின்றி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் இறுதிநாள் யாத்திரையை நிறைவுசெய்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விழா மற்றும் கட்சி விழா என இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை வரவேற்க, தமிழக பாஜக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக, திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் சார்பில் திருப்பூர் முழுவதும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் நிரப்பப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரிலும் பாஜக நிர்வாகிகள் சார்பில் மோடியை வரவேற்கும் விதமாக பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட பேனர்களை கிழித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள், வேண்டுமென்றே யாரோ வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறி புதிய பேருந்து நிலையம் முன் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பேனர்களை கிழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பில்கிஸ் பானு வழக்கு; முக்கிய நபருக்கு பரோல் வழங்கிய குஜராத் உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?