கோயம்புத்தூர்: நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தலில் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களை தீவிர படுத்தியுள்ளனர். இந்த நிலையில் கோவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது பிரசார பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில் தனது பிரசாரத்தை துவங்கிய அண்ணாமலை, இன்று (திங்கட்கிழமை) கோவை மருதமலை கோயில் அடிவாரம் பகுதியில் இருந்து திறந்த வெளி வேனில் தனது பிரசாரத்தை துவங்கினார். இதற்காக மருதமலை வந்த அண்ணாமலக்கு கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரசார வாகனத்தில் இருந்து பேசியு அவர், "இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். யார் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சியில் அமரப்போகின்றனர் என்பது தெரிந்தே நடைபெறும் தேர்தல். 2024 -2029 ஆட்சி காலத்தில் வளருகின்ற இந்தியா, வளர்ந்த இந்தியாவாக மாற்றம் அடையப்போகும் காலம்.
குறிப்பாக இந்த முறை பிரதமர் மோடி 400 எம்பிகளுக்கும் மேலாக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் . இன்னும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிட யாரும் இல்லை. பிரதமர் மோடி முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது அதற்கு ஆதரவு அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை.
அந்தவகையில், சிறப்பு சட்டம் 370, ராமர் கோவிலை உள்ளிட்டவைகளை போன்ற முக்கிய முடிவுகள் கடந்த காலங்களில் சில அரசியல் காரணங்களால் எடுக்கப்படாத நிலை ஏற்பட்டது. அடுத்து வரும் காலங்களில் அது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிறதா, என்பதை கண்காணிக்க வேண்டும்.
மேலும், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1040 கோடி ரூபாய் பணம் மத்திய அரசு வழங்கி இருந்தாலும் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கோவை தொகுதியில் நமது வெற்றி இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. ஆகவே உள்ளுடைய ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்" எனக் கூறினார்.
அதன் பின்னர் பிரசார் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தகிருஷ்ணன் வேடம் அணிந்தது நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சர்வேஷ் என்பவரை அண்ணாமலை அழைத்து முத்தமிட்டு கைகுலுக்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நான் பணம் தரமாட்டேன்.." - அண்ணாமலை பேச்சு!