திருநெல்வேலி: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாங்குநேரி அன்றும் இன்றும் என்ற தலைப்பில் நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் கருத்து அரங்கம் இன்று நடைபெற்றது.
இதில் நாங்குநேரி பள்ளி மாணவர்களிடையே நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள அமைத்த குழுவின் தலைவர் நீதி அரசர் சந்துரு சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய நீதியரசர் சந்துரூ,"நாங்குநேரி சம்பவத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. 650 பக்கம் கொண்ட அறிக்கையை முழுமையாக படிக்காமல் ஒரு கட்சியின் தலைவராக உள்ள எச் ராஜா நிராகரிப்பதாக அறிக்கை விட்டார். இந்த அறிக்கை ஒரு மதத்திற்கு எதிராக உள்ளதாக பாஜக தலைவர் சொல்கிறார்.
அறிக்கையில் எந்த பக்கத்திலும் மதத்திற்கு எதிராக எதுவும் குறிப்பிடப்படவில்லை. 20 ஆயிரம் புத்தகம் படித்திருப்பதாக சொல்லும் அண்ணாமலை 20,001வது புத்தகமாக அறிகையையும் படிங்கள் என சொன்னதற்கு எங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை என சொன்னார்கள். 2024 தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. ஒரு கட்சியை சேர்ந்த தேசிய குழுக்கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதில் நீதிபதி சந்துருவின் அறிக்கை நிராகரிப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். நாங்குநேரி சம்பவம் தொடர்பான அறிக்கையை நிராகரிப்பதற்கான எந்த காரணமும் பாஜக சொல்லவில்லை. பாஜக தவிர அனைத்து கட்சி தலைவர்களும் இந்த அறிக்கையை வரவேற்கிறார்கள்.
பள்ளிகளில் பிரச்சனைகளை தலைமை ஆசிரியர் தான் தீர்க்க வேண்டும்: கல்வி நிறுவனங்களில் எந்த பிரச்சனை நடந்தாலும் காவல் துரை செல்லக்கூடாது அதனை தலைமை ஆசிரியர் பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். வளர்ந்து வரும் வன்முறை காலகட்டத்தில் மாணவர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது. பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பிரச்சனையை பள்ளி வளாகத்திலேயே தலைமையாசிரியர் மூலம் தீர்த்துக் கொள்வது சாத்தியமானது அல்ல.
50 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களில் சாதிய பிரச்சனை அதிகரித்துள்ளது. சாதி ரீதியான பிரச்சனைகளை கல்வி நிறுவனங்களில் தீர்ப்பது சரியாக இருக்காது.மாணவர்களை அடித்து திருத்துவது தற்போது காலகட்டத்தில் முடியாத ஒன்று. மாற்று நடவடிக்கையை ஆசிரியர்கள் கையாள வேண்டும் என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களைப் போல ஆசிரியர்களுக்கும் புத்துணர்ச்சி வகுப்பு நடத்த வேண்டும். பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை அறிக்கையை நிராகரிப்பது ஏன்?: இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தை உருவாக்கும் ஒரு முயற்சி. அது குறித்தும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சமூக நீதி என்றால் என்ன என தெரியாத தலைமுறை தான் தற்போது உள்ளது. மாணவர்கள் வாழ்க்கைக்கு நல்ல நெறியை சொல்லிக் கொடுக்க வேண்டும். அறநெறி வேண்டுமென்று தான் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாமலை அறிக்கையை நிராகரிக்கிறோம் என சொல்கிறார்.
ஆசிரியர்கள் தான் சாதி வேறுபாடுகளை விதைக்கும் நபர்களாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மோடி கூட்டத்தில் சாக்கோபார் என சொல்லியதுதான் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்துள்ளது. அறிக்கை என்பது கொள்கை போல் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் சமூக நீதிப் போராட்டம் நடத்த வேண்டும்.
மாணவர்களை தத்துவ ரீதியாக தயார் செய்யப்பட வேண்டும். நாங்குநேரி அறிக்கையை படிப்படியாக நிறைவேற்றும் முயற்சியை மேற்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை சொல்லியுள்ளது, இதுவே பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த மதமும் கைகளில் கயிறு கட்ட சொல்லவில்லை. முன்னேறிய மாநிலத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் கையில் கயிறு கட்டி உள்ளனர்.
நெல்லை வந்த பயிற்சி ஐஏஎஸ் குழு கண்டு அதிர்ச்சி அடைந்தது. அதன் அடிப்படையிலேயே 2019 ஆம் ஆண்டு தலைமைச் செயலாளரால் வண்ணக் கயிறுகள் கட்ட தடை விதித்து அறிக்கையை வெளியிடப்பட்டது. கையில் வண்ண கயிறு கட்டக் கூடாது என அறிக்கை விட்டது ஸ்டாலின் அரசு அல்ல எடப்பாடி தலைமையிலான அரசு. கயிறு தொடர்பான அறிக்கை வெளியான நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அந்த சுற்றறிக்கை மீது எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்காமலே இருந்தது" என்றார்.