திருச்சி: திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா இன்று வழிபாடு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, "திருச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானதாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோயம்புத்தூர், வெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் எங்களுக்கு சொந்தமானது என வக்ஃபு வாரியம் உரிமை கூறியுள்ளது. நாடு முழுவதும் இதில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
வக்ஃபு வாரியம் சட்டம் 1994 ஆம் ஆண்டு வரும்போது, 4 லட்சம் ஏக்கர் மட்டுமே இவர்களுக்கு சொந்தமாக இருந்தது. ஆனால், இன்று 9 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தற்போது வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானதாக உள்ளது. பாதுகாப்பு, ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக 3-வது பெரிய நில உரிமையாளர் வக்ஃபு வாரியம்தான். இவை எந்த ஆதாரமும் இல்லாமல் தற்போது உரிமை கோருவது ஏற்கத்தக்கது அல்ல.
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை இஸ்லாமிய தலைவர்களும் வரவேற்கின்றனர். வக்ஃபு வாரிய இட ஊழலுக்கு காரணம் காங்கிரசும், திமுகவும் தான். தற்போது இந்து சமய அறநிலைத்துறை என்பது இந்து மக்களுக்கு எதிராகவே உள்ளது. தமிழகத்தில் பொய்யர்கள் ஆட்சி நடக்கிறது. வக்ஃபு வாரியத்துக்குள் முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினரும் இருக்கலாம் என்று கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசுதான் சட்டம் கொண்டு வந்தது.
வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்ற, திமுகவையோ, உதயநிதியையோ, அவரது மகனையோ அனுமதி கேட்க வேண்டுமா? தேசிய ஜனநாயக கூட்டணி ராஜ்யசபாவிலும் பலமாக இருக்கிறது. வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நிறைவேறும்.
அமைச்சர் நேரு கூட்டணி குறித்து பேசியதை முதலமைச்சர் ஸ்டாலின்தான் கேட்க வேண்டும். நேரு என்னுடைய நல்ல நண்பர். அவர் ஒரு கருத்து சொல்லியிருக்கிறர் என்றால், திமுக கூட்டணியில் ஒரு கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் தலித் ஒருவர் முதல்வராக வரமுடியாது என திருமாவளவன் சொன்னதை எண்ணிச் சொல்லியிருக்கலாம். இதனால் திமுக கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு இருப்பது மட்டும் தெரிகிறது. திமுக கூட்டணி குழப்பத்தில், பாஜகவுக்கு ஒருபோதும் பயனில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை ரத்து செய்தனர். ஆன்மிகம், நீதி போதனைகள் பற்றி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லித்தர வேண்டும். பெரியார், கருணாநிதி பற்றி பாடம் எடுத்தால் என்னாகும்? தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் கல்வித் தரம் குறைந்துள்ளது என்று ஆளுநர் கூறிய கருத்து மிகச் சரியானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு ரூ.573 கோடி தரவில்லை என்று பேசுகின்றனர்.
இத்திட்டத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துவிட்டு, தற்போது பின் வாங்குகிறார்கள். கடந்த, 35 ஆண்டுகளாக பாஜக நிர்வாக குழுவில் பணியாற்றி வருகிறேன். நான் ஒருபோதும் கூட்டணி பற்றி பேசியதில்லை. கூட்டணி குறித்து நான் கூறுவது சரியாக இருக்காது. இது குறித்து தலைமை தான் கூற வேண்டும். நான் பேசமாட்டேன்" இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்