திருச்சி: சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, திருச்சி சைபர் கிரைம் போலீசாரால், சென்னையில் இன்று (மார்ச் 6) காலை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சவுதாமணியிடம், திருச்சி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வரும் சவுதாமணி, இதற்கு முன்னர் ஆசிரியையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். மேலும், தற்போது பெண் தொழில் முனைவோராகவும் சவுதாமணி செயல்பட்டு வருகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.
பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, ஏற்கனவே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் தனது 'X' வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு, திமுக ஆட்சியில் மது புழக்கம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக அவதூறு கருத்து பரப்பியதாகக் கூறி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மீது, திருச்சி திமுக மத்திய மாவட்ட தொழில்நுட்ப பிரிவினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்த புகார் மனுவின் அடிப்படையில், பாஜக நிர்வாகி சவுதாமணியை திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் சமக கூட்டணி - சரத்குமார் அறிவிப்பு!