சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணமானது பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமானது தேர்தல் பணப்பட்டுவாடாவிற்காக எடுத்து செல்லப்பட்டதா? இதில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலின் போது நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்கள் பணத்தை எடுத்துச் சென்ற காரணத்தினால், இதில் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறது.
போலி உரிமை: இதுவரை எஸ்.ஆர்.சேகர், நயினார் நாகேந்திரன் உட்பட 15க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நான்கு கோடி ரூபாய் பணமானது தனக்கு சொந்தம் என ரயில்வே ஒப்பந்ததாரர் முஸ்தபா என்பவர் உரிமை கோரினார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அந்த பணம் முஸ்தபாவிற்கு சொந்தமில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் போலியாக உரிமை கோரியதன் பின்னணி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேசவ விநாயகம் 2வது முறையாக ஆஜர்: இந்த நிலையில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி விசாரணைக்காக ஆஜரானார். அப்போது 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தன்னிடம் விசாரிக்கக் கூடாது என கேசவ விநாயகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், 'நீதிமன்ற முன் அனுமதியின்றி அவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தக்கூடாது' என உத்தரவிட்டது.
இதையும் படிங்க: சென்னை ஏர் ஷோ: ஐந்து பேர் உயிரிழப்புக்கு தமிழக அரசை குற்றம்சாட்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன்!
இதை எதிர்த்து சிபிசிஐடி போலீசார் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கேசவ விநாயகம் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக 11 மணியளவில் ஆஜரானார். மேலும் போலியாக உரிமை கோரிய முஸ்தபா மற்றும் கேசவ விநாயகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நூற்றுக்கணக்கான கேள்விகள் தயார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்போன் தர மறுப்பு? கேசவ விநாயகம் விசாரணைக்காக வரும் போது வழக்கறிஞர் பால் கனகராஜ், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் வந்தனர். இதற்கிடையே விசாரணைக்காக கேசவ விநாயகத்தின் செல்போனை கொடுக்க முடியாது என சிபிசிஐடி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய தலைவர்கள் உடன் செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவை இருப்பதால் தர மறுத்ததாகத் தகவல் கூறியுள்ளனர். தொடர்ந்து மற்ற பாஜக நிர்வாகிகளுடன் விரிவான விசாரணையை தீவிர படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்