சென்னை: சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பாஜக பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக, பாஜக இளைஞர் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் அவரின் ஓட்டுநர் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். நேற்று (பிப்.06) முன்ஜாமீன் கிடைக்கப் பெற்ற நிலையில், டெல்லியில் இருந்து இன்று (பிப்.08) சென்னை விமான நிலையம் வந்த அமர் பிரசாத் ரெட்டி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இது என் மீது வைத்த பொய்க்குற்றச்சாட்டு. நான் தலைமறைவாக இல்லை. கட்சியின் தலைமை இடத்தில் இருந்து, வரும் தேர்தல் தொடர்பாக எனக்கு முக்கியமான பணியைக் கொடுத்தனர். அதனால் டெல்லியில் இருந்தேன். மேலும், நான் தொடர்ந்து காவல் ஆய்வாளரிடம் தொடர்பு செய்ய முயன்றேன். அவர் அழைப்பை ஏற்கவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கருத்தை, கருத்தால் மோத வேண்டும். ஆனால், பொய் வழக்குப் பதிவு செய்கிறார்கள். திமுகவின் தமிழச்சி தங்கப்பாண்டியனின் உறவினர், எங்கள் கட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நபரை தகாத வார்த்தையால் திட்டியதோடு, என்னை ஏதும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளனர்.
ஆகவே, இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நான் காவல் துறைக்குப் பேசினேன். ஆனால், அவர்கள் முந்திக் கொண்டு என் மீது பொய்யான வழக்கைப் பதிவு செய்தனர். தமிழகத்தை ஆளும் திமுக, பாஜகவை பார்த்துப் பயப்படுவதால், நாங்கள்தான் தமிழ்நாட்டில் எதிர்கட்சிபோல் செயல்படுவது உறுதியாகிவிட்டது.
காவல்துறை தவறான தகவல்களைக் கொண்டு வழக்குப் பதிவு செய்கின்றனர். என்னுடன் இருப்பவர்களின் குடும்பத்தினரை இரவு பகலாக விசாரணை என்ற பெயரில் கடுமையாக தொந்தரவு செய்து வருகின்றனர். அரசியலை அரசியலாக மோத முடியாமல், திமுக செயல்படுகிறது. மேலும், ஒரு தெளிவான அரசியல் தமிழகத்தில் வர வேண்டும். மனிதாபிமானமற்ற நிலையில், தமிழக அரசு செயல்படுகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய கோரிய அண்ணாமலையின் மனு தள்ளுபடி!