சென்னை: சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையினை கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். தேர்தல் அறிக்கையினை தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாசலம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறும்போது, “சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் எதிர்காலத்தில் நடைபெறுமா என்ற அச்சத்தை இந்த சூழல் உருவாக்கி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்பதை நாடு நன்கு அறியும்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி கூறினார். 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், வேலை கொடுக்கவில்லை. இந்தியாவில் வேலை இழப்பு தான் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் வங்கிகளில் பதுக்கிய கருப்பு பணம் மீட்டு 15 லட்சம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்று கூறினார். ஆனால், 15 ரூபாய் கூட வரவில்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என்று கூறினார். ஆனால் செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும் திருத்த மாட்டோம் என அகங்காரமாக பேசிய மோடி அவரே திரும்பப் பெற்றார். பாகிஸ்தான், சீனா போர் தொடுத்தால் எப்படி செயல்படுமோ, அதுபோல் ஒன்றிய அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரான போரை தொடங்கி இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், அவர்களின் மேல் வரி மேல் வரி போடப்படுகிறது. அதேநேரம் கார்பரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வரிச் சலுகைகள் அளிக்கப்படுகிறது. மதத்தை பயன்படுத்தி, கடவுளைக் காட்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்கின்றனர். ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்துகின்றனர். இந்தியாவிலேயே எந்த பிரதமரும் இந்த விமர்சனங்களை பெற்றதில்லை.
பொய் பேசுகிற பிரதமர் என்ற அடைமொழியை மோடி பெற்றிருக்கிறார். எதிர்கட்சிகளே இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. வருமான வரித்துறை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாங்கள் முறையாக வரி செலுத்தி வருகிறோம். அமலாக்கத்துறையும் மற்றும் வருமான வரித்துறையும் மோடியின் ஏவல் நாய்களாக செயல்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்துமா என்று அச்சம் இருக்கிறது. அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம். அவருக்கு எந்த வரலாறு எதுவும் தெரியாது. இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரும் அளவில் நடந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த வரலாறு தெரியாமல் பிஞ்ச செருப்பு என்று திமிர் பிடித்த அண்ணாமலை கூறியிருப்பதற்கு கண்டனத்தை தெரிந்துக் கொள்ளகிறேன்.
பாஜகவிற்கு இரண்டு மொழிகள் தான். ஒன்று ஆர்.எஸ்.எஸ் மொழி சமஸ்கிருதம், மற்றொன்று இந்தி. எதிர்காலத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் தேர்தல் நடத்துமான என்ற எண்ணம் இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குகிறது. ஆனால், எதிர்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை அல்லது தாமதம் செய்யப்படுகிறது.
நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தேர்தல் பத்திர ஊழல் உலகமே கண்டிராத ஊழல். தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பல கோடி ரூபாய் பெற்று பாஜக அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த தேர்தலை யுத்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்றி பெறும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் என்ன செய்வோம் என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் நிர்மலா சீதாராமன் தேர்தலில் நின்றாள் தோற்றுவிடுவோம் என்பதால் தான் நிற்கவில்லை. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தமிழிசை சௌந்தரராஜன் தேர்தலுக்கு வந்து இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை டெபாசிட் கூட வாங்க மாட்டார்.
பத்தாண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கிறாரே, ஏன் கச்சத்தீவை மீட்கவில்லை? பிரதமர் மோடி தமிழக மீனவர்களை இந்தியக் குடிமகனாக கருதவில்லை. தமிழ்நாட்டில் ரவுடிகள், சமூக விரோதிகள், பாஜகவில் தான் இருக்கின்றனர். பாஜக வேட்பாளர்களே ரவுடி பட்டியல், கொலை வழக்கு, கொள்ளை அடித்த வழக்கில் உள்ளவர்கள் தான்” என்றார்.