மதுரை: மரங்கள் இந்த பூமிப் பந்தில் வாழும் மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களையும் காக்கும் வரங்கள். ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. ஏதேனும் ஒரு வகையில் இந்த மண்ணும் அதை சார்ந்து வாழும் உயிர்களும் அந்த மரங்களால் அதன் பயனடைந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆலமரம் பயன்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
அதன் அருமையை உணர்ந்த காரணத்தால் தான் அந்த மரத்தின் கீழே விநாயகரை பிரதிஷ்டை செய்து ஆன்மீகத்தின் பெயரால் காலம் காலமாக ஆலமரங்களை பாதுகாத்து வருகின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைக்கு சாலை விரிவாக்கம், பாலங்கள் அமைத்தல், ரயில் தண்டவாளங்கள் உருவாக்குதல் என பல்வேறு காரணங்களால் மரங்களும், ஆறுகளும், கண்மாய்களும் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கின்றன.
அதனைக் காப்பதற்காக ஒருபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்றை பாதுகாத்து அதற்கு ஆண்டில் ஒரு முறை கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர் என்றால் வியப்பாகத்தான் இருக்கும். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள கண்மாயின் கரையில் மீனாட்சிபுரம் அருகே அமைந்துள்ள அந்த ஆலமரம் ஒரு காலத்தில் விரிந்து பரவி மாபெரும் நிழற்குடையாக பறவைகளின் வாழிடமாக திகழ்ந்தது.
தற்போது அதன் விழுதுகள் எல்லாம் வெட்டப்பட்டு, எஞ்சி நிற்கின்ற மரத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் தலைமையில் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி கூறுகையில், “செல்லூர் மீனாட்சிபுரத்திற்கு இந்த ஆலமரம் தான் ஒரு காலத்தில மிக பெரும் அடையாளமாக இருந்துச்சு.
நா சின்ன பிள்ளையா இருக்கும் போது பார்த்த ஆலமரங்கள் இப்போது இல்லனாலும், இருக்கிற இந்த மரத்தையாவது நாம பாதுகாக்கனும். மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தம் இன்ன வரைக்கும் ஆலமரம் பேருந்து நிறுத்தம் தான்னு சொல்லப்படுது. அதனால இங்கிருக்கிற மக்கள் எல்லாரு ஒருங்கிணைஞ்சு இந்த ஆலமரத்தை பாதுகாக்க முன்வரனு” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபூபக்கர் கூறுகையில், “மதுரையில பாத்திமா கல்லூரி, அண்ணா பேருந்து நிலையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலமரத்தை அடையாளப்படுத்தி தான், அங்க பேருந்து நிறுத்தங்கள் இன்னவரைக்கும் இருக்கு. ஆனா அங்கிருந்த ஆலமரங்கள் மட்டும் இப்போ இல்லை. வளர்ச்சி, விரிவாக்கம் அப்படினு நிறைய மரங்கள வெட்டி வீழ்த்திடாங்க. ஆலமரம் மட்டுமில்லாம, பல பழமையான மரங்களும் இதுல அழிஞ்சுடுச்சு.
இப்போ மீனாட்சிபுரம் கண்மாய்க்கரையில இருக்க இந்த ஆலமரத்தை ஒட்டி ஒன்பது மரங்கள் இருச்சு. மரத்தை ஒட்டி மின்சார கம்பிகள் போறதுனால இந்த மரத்த அடிக்கடி வெட்டிடுறாங்க. அதே மாதிரி ஆலமரத்தோட விழுதுகளையும் இங்குறவ வெட்டியிடுறாக. இந்த பகுதியில இருக்குற பல மக்களுக்கு மரங்கள் மீது கொஞ்சமும் அக்கற கிடையாது. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும் என்பதை மனசுல வச்சுகனு.
ஆலமரத்த வீட்ல வச்சு வளர்க்க முடியாது. கண்மாய்க்கரை மாதிரி நீர் நிலைகளில் தான் இவை வளரும். இந்த ஆலமரம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த அஞ்சு வருசமா இப்பகுதியில இருக்குற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாரும் ஒருங்கிணைந்து இந்த மரத்துக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுறோம். ஜூலை 28ஆம் தேதி இந்த மரத்தோட 105ஆவது பிறந்தநாளை கொண்டாடுறோம்.
இது போன்ற முயற்சிகளை சிலர் ஏளனமாக பாக்குறாங்க. ஆனால் அத பத்திலாம் நாங்க கவலைப்படாம மரங்களைப் பாதுகாக்கும் பணியை தொடர்ந்து செஞ்சுட்டு வர்றோம். இனிமேலும் செய்வோம்” என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில், “எங்களின் இந்த முயற்சிக்கு மதுரை மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பை வழங்குகின்றன. எதிர்காலத்தில் இந்த மரத்தைச் சுற்றி திண்ணை போன்ற வடிவமைப்பில் சுற்றுச்சுவர் அமைத்து பாதசாரிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை கோருவோம்” என்றார்.
ஒரு பக்கம் நவீனமயமாக்கலிலும், மறுபக்கம் இயற்கையாலும் மரங்கள் அழிந்து வரும் நிலையில், அனைவரும் மரங்களை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், சமூக ஆர்வலர்கள் நூற்றாண்டு பழமையான ஆலமரத்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அதிகரிக்கும் BTS ஆர்மி! கொரிய மொழி கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டும் இளசுகள்! - Korean language teacher Jayashree